Che Guevara Biography History..

ஒரு புத்திசாலியான மாணவனாகத் திகழ்ந்ததால் ஆசிரியர்களுக்கு குவேராவை மிகவும் பிடித்தது தன் பயணத்தில் ஏழைகளின் கஷ்டங்களை அறிந்த குவேரா, அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.

சே குவேராவுக்கு அல்பர்டோ கிரனடோ என்றொரு நண்பர் இருந்தார். இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றி வர வேண்டுமென்ற ஆசையில், மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பினர். ஒரு வருடம் முழுக்க அவர்கள் தென் அமெரிக்காவைச் சுற்றி வந்தனர்.

பெரு நாட்டில் அமேசான்(Amazon) நதிக்கரையில் அமைந்திருந்த சான் பாப்லோ தொழு நோயாளிகள் காப்பகத்தில், ஒரு சில வாரங்கள் இருவரும் தன்னார்வ ஊழியர்களாக பணியாற்றினார்கள். இங்கு தொழு நோயாளிகள் படும் வேதனைகளைக் கண்டு சே குவேரா மனம் வருந்தினார்.

சே குவேரா அர்ஜென்டினா, சிலி, பெரு, வெனிசுலா, மியாமி என தென் அமெரிக்காவின் பல பகுதிகளைச் சுற்றி வந்தார். இந்தப் பயணத்தில் அவர் ஏழைகள் படும் கஷ்டங்களை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். பின்னாளில் சே குவேராவிடம் வளர்ந்திருந்த அரசியல் சிந்தனைகளுக்கு, இப்பயணமே அடிப்படையாக அமைந்தது.

மோட்டார் சைக்கிள் பயணத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் ஒரு டைரியில் குறித்து வைத்தார். அந்தக் குறிப்புகள் பின்னாளில், 'தி மோட்டார் சைக்கிள் டைரிஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதே பெயரில் ஒரு திரைப்படமும் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.

சே குவேரா அந்த டைரியில் பல விவரங்களைக் குறித்து வைத்திருந்தார். அவர் கண்ட வறுமையின் கொடுமைகளை, "இந்தப் பயணத்தில் நான் நோயையும் பசியையும் வறுமையையும் அருகே இருந்து பார்த்தேன். பணம் இல்லாததால் ஒரு நோயாளிக் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன தந்தையைப் பார்த்தேன். அவர் தனது மகன் ஒரு விபத்தில் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டார்," என்று எழுதியிருந்தார்.

சே குவேரா தன் பயணத்தை முடித்து வீடு திரும்பிய போது ஒரு புதிய மனிதராக இருந்தார். சோஷலிசத்தை விரும்பக் கூடியவராக மாறி இருந்தார். மீண்டும் தன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். ஆனால் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது

953இல், அர்ஜென்டினா ஜனாதிபதி ஜீஆன் பெரோனை எதிர்த்து உள்நாட்டுக் கலகம் ஒன்று நடந்தது. இதில் சே குவேரா கலந்து கொண்டார். இதற்கிடையில் தன் படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலையை தேட முயற்சிக்காமல் அவர் மீண்டும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இம்முறை அவர் பொலிவியா,(Bolivia) பெரு ஈக்வடார்,(Peru Ecuador) பனாமா,(Panama) கோஸ்ட்டா ரிக்கா,(Costa Rica) நிகரகுவா,(Nicaragua) ஹொந்துராஸ்,(Honduras) எல் சல்வேடர்(El Salvador) ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1953 டிசம்பர் 10ஆம் தேதியன்று, சே குவேரா கோஸ்டா ரிக்காவில் இருந்து கவுதமாலா புறப்பட்டார். அதற்கு முன்பு அவர் தனது அத்தை பீட்ரிசுக்கு (Beatrice)ஒரு கடிதம் எழுதினார். அதில், 'யுனைட்டட் ஃபுரூட்(United Fruit) கம்பெனி எனும் அமெரிக்க நிறுவனம், தொழிலாளர்களை கசக்கிப் பிழிகிறது. முதலாளித்துவம் ஆக்டோபசைப் (Octopuses) போல பயங்கரமானது.' என்று குறிப்பிட்டிருந்தார்.


கவுதமாலா நகரம் வந்தடைந்த சே குவேரா, அங்கு Hilda Cadia Agusta என்ற பெண்ணை சந்தித்தார். ஹில்டா, பெரு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட, மார்க்சிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு கொண்ட பொருளாதார நிபுணர். அவர், 'அமெரிக்கன் பாப்புலர் ரெவலூஷனரி அலையன்ஸ்’(Revolutionary Alliance) என்ற புரட்சி அமைப்புடன் அரசியல் ரீதியான தொடர்பு வைத்திருந்தார். இவரை சே குவேரா 1955ஆம் ஆண்டில் திருமணம் செய்து, ஒரு பெண் குழந்தையைப் பெற்றார்.

கவுதமாலாவில் அர்பென்ஸ் என்பவர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர் என்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் இங்கு சுதந்திரமாக நடமாடினர். ஹில்டாவுக்கு அர்பென்சின் அரசாங்க அதிகாரிகள் பலருடன் தொடர்பு இருந்ததால், அவர்களை சே குவேராவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த காலக்கட்டத்தில், கியூபாவில் படிஸ்டா என்பவர் ஆட்சியில் இருந்தார். இவர் அமெரிக்க அரசாங்கத்தின் கைப்பாவையாக செயல்பட்டார். இவரை எதிர்த்து ஃபிடல் கேஸ்ட்ரோ என்பவர் தலைமையில் புரட்சி நடந்துக் கொண்டிருந்தது.