இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் நாம் அறிய வேண்டிய முதல் பெயர் புலித்தேவன். பெயரிலேயே வீரம் ஒலிக்கும். இவரது பெயர் பூலித்தேவன் என்பதே. இவரது சீற்றம் - வீரம் - கோபம் கருதி புலித்தேவன் என்ற மிகப் பொருத்தமான பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம். அதோடு மக்களுக்கு இன்னல் விளைவித்த புலியைக் கொன்ற இவரது வீரம் கருதி புலித் தேவன் என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. மகாத்மா காந்தி போன்றவர்கள் சுதந்திரப்பயிர் வளர்த்து வெற்றிக்கனியை கொய்து தந்தனர் என்றால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புலித்தேவன் போன்றவர்களால் விதைக்கப்பட்ட விதையே காரணம் எனலாம். இடைவிடாது போர்களைச் சந்தித்த இவரின் வரலாறு ஒரு வீர வரலாறு எனலாம். 1714இல் பிறந்த இவரது இயற்பெயர் 'காத்தப்பதுரை' என்பதாகும். இவரது தந்தையார் சித்திர புத்திரத் தேவர், தாயின் பெயர் சிவஞான நாச்சியார். இவரது பிறந்த நாள் 1.9.1715 என்றும் கூறப்படுகிறது திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையார்புரம் என்கிற நெற்கட்டும் செவ்வல் பாளையமே இவரது ஊர் தனது 12ஆம் வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், வாள்யுத்தம் எனப் பல்வேறு வீரவித்தைகளில் தேர்ச்சி பெற்றவர். நெற்கட்டும் செவ்வல் ஆட்சிப் பொறுப்பை புலித் தேவன் ஏற்ற காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி வேகுன்ற ஆரம்பித்தது. நவாபு கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறைய கடன்பட்டிருந்தார். பாளையக்காரர்களிடம் வரியை வசூல் செய்து, அக்கடனைத் தீர்த்திட நினைத்தான் நவாபு வரி வசூல் செய்ய நவாபால் இயலாது போயிற்று எனவே ஆங்கிலேயர்களே நேரிடையாக பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை வழங்கினான் அந்த வகையில் புலித்தேவனிடம் ஆங்கிலேயர் வரி கேட்ட போது. வரிகட்ட மறுத்து தனது ஆங்கிலேய எதிர்ப்பை வெளியிட்டார் புலித்தேவன். இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை போன்ற பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்பு கர்னல் ஹெரான் என்பவருக்கு தரப்பட்டிருந்தது. அவரின் கட்டுப்பாடு அதிகம். அவருக்கு அஞ்சி பல பாளையக்காரர்கள் வரி செலுத்தினர். புலித்தேவனோ அவரை சந்திக்கக்கூட மறுத்தார். எங்கோ ஆனால் இருந்து வந்த ஆங்கிலேயருக்கு வரி செலுத்தி அடங்கிப் போக இவரின் சுதந்திர உணர்வு சம்மதிக்கவில்லை. புலித்தேவனை பணிய வைக்க நினைத்த கர்னல் ஹெரான் 1755ஆம் ஆண்டு மே மாதம் 2ம் நாள் ஒரு பெரும் படையுடன், புலித்தேவனின் பகுதியான நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டான். அதோடு கொஞ்சமாவது முதலில் வரியை செலுத்துமாறு தூது அனுப்பினான். ஆனால் கண்டிப்பாக வரி செலுத்த புலித்தேவன் மறுத்து விட்டார். கோபம் கொண்ட ஹெரான் அவரது கோட்டையைத் தாக்கினார். புலித்தேவனின் கோட்டை 9 களிமண் கோட்டை அதனை துப்பாக்கியால் சேதப்படுத்த முடியவில்லை. தோல்வியுடன் திரும்பிய கர்னல் இது குறித்து நவாப்பிடம் முறையிட்டான். அதோடு புலித்தேவனிடம் வரி வசூல் செய்து தருமாறும் நவாப்பிடமே கர்னல் கேட்டார். இது ஒரு வகையில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வி என்றே கூறலாம். புலித்தேவன் தனது நாட்டை மேலும் விரிவுப்படுத்த எண்ணினார். அதற்காக திருநெல்வேலிப் பகுதி மீது படையெடுத்தார். அப்போது நெல்லையை ஆண்டவன் மஃபஸ்கான். அவனிடம் மிக நவீன ஆயுதங்கள் இருந்தன. எனவே அவரை புலித்தேவனால் வெற்றி கொள்ள முடிய வில்லை. இதனால் தனது படைபலத்தை புலித்தேவன் பெருக்கிக் கொள்ள விரும்பி. திப்புசுல்தானிடம் உதவி கோரினார். திப்புவும் சம்மதித்தார். இதனைக் கேள்விப்பட்ட ஆங்கிலேயருக்கு அச்சம் மிகுந்தது. எப்படியும் புலித் தேவனை வீழ்த்த விரும்பினார். பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான ஆங்கிலேயர்கள் புலித்தேவனுக்கு ஆதரவாக இருந்த சிவகங்கை, இராமநாதபுரம் பகுதி மறவர்களை புலித்தேவனுக்கு எதிராக செயல்பட முயற்சித்தனர். மஃபஸ்கான் போன்றவர்களை புலித்தேவனுக்கு எதிராக தூண்டி விட்டனர். மஃபஸ்கான் படையுடன் சென்று புலித்தேவனுக்கு உரிமையான சிங்கம்பட்டி கோட்டையைக் கைப்பற்றினான். தனக்கு எதிராக செயல்பட ஊத்துமலை, செய்த்தூர் மீது படையெடுத்து கைப்பற்றினார். புலித்தேவன் 1758இல் திருநெல்வேலியையும் கூட கைப்பற்றினார். புலித்தேவனின் வீரம், வளர்ச்சி, எதிர்ப்பு ஆகியவை ஆங்கிலேயரை மிகவும் வைத்தது. இதனை வளரவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டினார். இதற்காக புலித்தேவனின் எதிரியான யூசுப்கான் என்பவரை பயன்படுத்திக் கொண்டனர். தஞ்சாவூர் புதுக்கோட்டை அரசர்களின் படையும் ஆங்கிலேயர் அறிவுரைப்படி யூசுப்கானுக்கு உதவி செய்தது. அதோடு திருவாங்கூர் மன்னன் எதிர்ப்பும் புலித்தேவருக்கு சேர்ந்தது. எல்லோரது எதிர்ப்பும் இருந்தும் நெற்கட்டும் செவ்வலை வெல்ல இயல வில்லை. அதோடு வாசுதேவ நல்லூர் முற்றுகையிலும் புலித்தேவனே வெற்றி பெற்றார். இருப்பினும் யூசுப்கானின் தோல்வியால் வளர்ந்த பகையால். அவன் எப்படியும் புலித்தேவனை வீழ்த்த முடிவு செய்தான். தன் படை பலத்தைப் பெருக்கினான். 1760ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் நாள் யூசுப்கான் நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டான். 1761ஆம் ஆண்டு மார்ச்சு 21 முதல் மே 16 வரை இந்த மாபெரும் போர் நீடித்தது. சேதம் இருவருக்கும் அதிகம். இறுதியில் புலித்தேவனின் நெற்கட்டும் செவ்வல், வாசுதேவ நல்லூர். பனையூர் போன்றவை யூசுப்கானால் கைப்பற்றப்பட்டது. அதோடு அவை இடித்து தரைமட்டம் ஆகியது. இதற்கு மேல் அதிகமாக புலித்தேவன் பற்றிய செய்திகள் சரிவர கிடைக்கவில்லை. இந்த மாபெரும் வீரனின் இறுதிக்கால வரலாறு இன்று வரை மர்மமாகவே உள்ளது. இவர் அந்நியரிடம் அகப்படக்கூடாது என்ற உணர்வில் தற்கொலை செய்து கொண்டதாகவும், சங்கரன் கோயிலில் இறைவனோடு கலந்துவிட்டார் என்றும் கூறப் படுகிறது. புலித்தேவன் தன் நண்பர்களுடன் தப்பிச் சென்று மேற்குத் தொடர்சி மலையில் ஒளிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரை வெள்ளையர்கள் கண்டுபிடித்து கைது செய்தனர். அதோடு அவரை பாளையங் கோட்டைக்கு அழைத்து சென்றனர். வழியில் சங்கரன் கோயில் இறைவனை வழிபட விரும்புவதாக ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று கோயிலுக்குச் சென்றார். அதன் பின்னர் அவரை யாருமே பார்க்க வில்லை. ஒரு சமயம் ஆங்கிலேயர் அவரை கொன்று இருக்கலாம். எப்படியோ - புலித்தேவன் என்ற பெயர் ஆரம்பக் கால எதிர்ப்புக்கு முதலிடம் வகிப்பதை யாரும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது.