நீதிக்கு முன்னால் அனைவரும் சமம்



அக்பர் பீர்பாலிடம் பொதுவான விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, 'பீர்பால்
உங்களுக்கு சகுனங்களில் நம்பிக்கை உண்டா? நம் நாட்டில் கெட்ட சகுணம் என்று சொல்லுமளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா? என்றார்.

அக்பரின் கேள்வி பீர்பாலை வேதனை அடைய வைத்தது. அறிவு பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தும் அரசர். இப்படி மூட நம்பிக்கைகளில் தம் மனதை திசை திருப்புவது பீர்பாலுக்கு பிடிக்கவில்லை. தம் மனதுக்குள் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் 'அரசே மற்றவர்கள் கண்டு வெறுக்கும்படியான கெட்ட சகுனம் மிக்க ஒருவன் இவ்வூரில் வசிக்கிறான்! காலையில் யாரும் அவனது முகத்தில் விழித்தாலே அன்றைய பொழுது முழுவதுக்கும் ஒரு வாய் சோறு கூட கிடைக்காது! படாத பாடு பாட வேண்டும் என்றார் பீர்பால்.

அப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலியை நான் பார்க்க வேண்டும்! அரண்மனைக்கு அழைத்து வாருங்கள். அவன் முகத்தில் நான் விழிக்கிறேன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்! என்று ஆவல் பொங்க கூறினார் அக்பர்.

அடுத்த நாள் இரவு பீர்பால் ஒருவனை அழைத்து வந்தார். அரண்மனையில் தங்க வைத்தார். அக்பர் படுத்துறங்கும் அறையிலேயே அந்த மனிதரை படுக்குமாறும் விடியற்காலையில் அக்பர் எழுந்து கொள்வதற்கு முன் அவன் எழுந்து அக்பர் முன் நிற்க வேண்டும் என்றும் கூறிவிட்டு பீர்பால் போய்விட்டார்.

பொழுது விடிந்தது. அக்பர் எழுந்தார். அவருக்கு முன்னால் அந்த மனிதன் நின்று கொண்டிருந்தான். இவ்ன முகத்தில் விழித்தால் கெட்ட சகுனம் என்று கூறியதை சோதித்து பார்ப்போம் என்று அந்த மனிதனை நன்றாகப் பார்த்து விட்டு வெளியில் வந்தார். தமது அன்றாட
அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். அன்று அரச சபைக்கு நிறைய வழக்குகள் வந்த படியால் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணிகளை கொண்டிருந்தார். தொடர்ந்து

உணவு உண்ணக் கூட நேரமில்லாமல் பணிகளை செய்ததில் மிகுந்த சோர்வும் சலிப்பும் மேலிட நடந்து வரும்போது காலையில் அந்த மனிதனின் முகத்தில் விழித்தது நினைவுக்கு வந்தது. அவனது முகத்தில் விழித்த படியால் தான் தமக்கு இன்று முழுவதும் சாப்பிடக் கூட முடியாமல் கஷ்டப்பட நேர்ந்தது என்று எண்ணிய படியே காவலாளியைக் கூப்பிட்டார்.

'நேற்று, பீர்பால் ஒருவனை அழைத்து வந்து என் அறையில் தங்க வைத்தாரே, அவனை சிறையில் அடைந்து வையுங்கள்! நாளை தூக்கில் போடுங்கள் என்று கட்டளையிட்டார் அக்பர். பீர்பாலிடம் அரசர் கூறிய தண்டனையை பற்றி காவலாளிகள் முறையிட்டார்கள். உடனே அக்பரை காண வந்தார் பீர்பால்.

'அரசே அந்த கெட்ட சகுனம் பிடித்தவனை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்துள்ளதாக கேள்வி பட்டேன்! என்றார் தயக்கத்துடன்.

பீர்பால் இவனைப் போன்ற துர்பாக்கிய சாலிகள் இவ்வுலகில் வாழ்ந்து எந்த பயனும் இல்லை இவனால் மற்றவர்களுக்கு கஷ்டந்தான்!

இன்றைக்கு இவன் முகத்தில் முழித்து விட்டு நான் பட்டபாடு. இது வரைக்கும் இப்படி கஷ்டப்பட்டதே இல்லை. எல்லாம் இவனால்தான். அதனால் தான் கூறுகிறேன். இவனை தூக்கிலிட்டால் யாருக்கும் எந்த தொந்திரவும் இருக்காது என்று கூறினார் அக்பர்.
அரசே நீதி நியாயம் என்பது அரசருக்கும் ஒன்றுதான். சாதாரண குடிமகனுக்கும் ஒன்றுதான் என்று இதுவரைக்கும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது இப்பொழுதுதான் புரிகிறது.

'பீர்பால், நீதி நியாயம் என்பது பொதுவானது தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை'

'அரசே இரவு முழுவதும் தூங்கிவிட்டு விடியற்காலையில் உங்கள் முகத்தில் தாளே விழித்தான், அந்த மனிதன்!

'ஆமாம்'என்றபடி தலை அசைத்தார் அக்பர்.

'அரசே விடிந்ததும் நீங்கள் அவன் முகத்தை பார்த்தீர்கள். அதன் பலனாய் இன்று முழுவதும் சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் கஷ்டப்பட்டீர்கள். அந்த கெட்ட சகுனம் பிடித்தவன் தங்கள் முகத்தில் விழித்தான், உங்கள் முகத்தில் அவன் விழித்தபடியால் என்ன பலன் கிடைத்தது. தூக்கு தண்டனைதான் இப்போது யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவன் முகத்தில் விழித்தபடியால் உங்களுக்கு மன உளைச்சலும் சோர்வும் சலிப்பும் தான் பலனாக இருந்தது.

உங்கள் முகத்தில் அவன் விழித்திருக்கிறான். அவனுக்கு பலன் தூக்கு தண்டனைதான். இப்போது சொல்லுங்கள் கெட்ட சகுனம் மிக்கவர் யார்? நீங்களா? அவனா? என்று கேள்விக் கேட்டார் பீர்பால். பீர்பாலின் கூற்றில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டார். காவலாளியைக் கூப்பிட்டு சிறையில் அடைத்து வைத்திருந்த அந்த மனிதனை விடுதலை செய்ய சொன்னார். தவறை சுட்டிக்காட்டிய பீர்பாலை பாராட்டினார்.

Tamil Old Stories