டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு...




1947 சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நவீன பாரதத்தை வழிவகுத்து தந்த மேதைகளில் இவரும் ஒருவர். துணிவு, திறமை, கல்வி என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி, இந்தியாவின் விடிவெள்ளி. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர். இந்திய சட்ட நிபுணர். இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்துத் தந்தவர்.

அம்பேத்கரின் தந்தையார் பெயர் இராம்ஜி சக்பால். இராணுவப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி செய்தவர். அம்பேத்கரின் தாயார் பெயர் பீமாபாய். இவர்களுக்கு 14 குழந்தைகள். கடைசி குழந்தையே அண்ணல் அம்பேத்கர். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மோ என்ற ஊரில் 1891ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி என்பதே. இக்காலத்தில் நாட்டில் மட்டுமல்ல, பள்ளியிலும்

கூட தீண்டாமை தலை விரித்தாடியது. தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை. பள்ளியில் உயர்ந்த ஜாதி மாணவர்கள் பலகையில் அமரலாம். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தரையில் கோணியை விரித்து அமரவேண்டும். ஆசிரியர் அவர்களை தொடமாட்டார்.

இந்த இழிநிலையில் பீமாராவ் ராம்ஜி பள்ளிக்குச் சென்றார். ஆனால் அவருக்கு கிடைத்த ஆசிரியர் அருமையானவர். வித்தியாசமானவர். அறிவாளர் என்றாலும் பண்பாளர். அவர் பெயரே அம்பேத்கர் என்பது, அவர் அன்புடன் நடத்தினார். உணவு தந்தார். அரவணைத்து கல்வி தந்தார். தனக்கு உதவிய இந்த நல்லாசிரியர் பெயரை தன் பெயருடன் பீமாராவ் ராம்ஜி இணைத்துக்கொண்டார். 'பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்' என்று தானே நிர்ணயித்தார். காலப்போக்கில் அதை சுருக்கி, அம்பேத்கர் என்ற பெயரே இவருக்கு நிலைத்தது.

அம்பேத்கர் ஆசிரியர் மீது மட்டுமல்ல, கல்வி மீதும் அன்பு காட்டினார். அம்பேத்கரின் நண்பர் கிருஷ்ணாஜி உதவியாலும் தந்தையின் தூண்டுதலாலும் அம்பேத்கர் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். அப்போதைய பரோடா மன்னர் சாயாஜி என்பவர். அவர் அம்பேத்கருக்கு பொருள் உதவி வழங்கினார்.

இதனால் அம்பேத்கர் கல்லூரிப் படிப்பை தொடர்ந்து 1912இல் பி.ஏ. படிப்பை தொடர்ந்தார். அதோடு அவர் கல்வி ஆசை தணியவில்லை. அமெரிக்கா சென்று கல்வி பயில விரும்பினார். அதற்கு மறுபடியும் பரோடா மன்னர் உதவினார். அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். ஒரு நாளைக்கு 18 மணி நேரத்தை படிப்பிற்கு செல விட்டார். மிகமிக சிக்கனமாக வாழ்ந்து பரோடா மன்னரின் உதவித்தொகையில் படிப்பையும் தன் செலவையும் கவனித்து அதிலேயும் மீதப்படுத்தி இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பி வைத்தார்.


1915இல் எம்.ஏ. பட்டமும், 1916இல் தத்துவ பேரறிஞர் பட்டமும் பெற்று இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பியதும் மும்பையில் இருந்த கல்லூரி ஒன்றில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணி செய்தார். பல மிகச் சிறந்த நாட்டுப்பற்று மிக்க மாணாக்கர்களை உருவாக்கினார். இந்த ஊதியத்தில் கிடைத்த தொகையை சிக்கனமாக செலவிட்டு ஒரு பகுதியை மேலும் கல்விக்கென சேமித்தார்.

அப்பணத்தாலும், அவரது நல்ல நண்பர் நேவல்பதேனா தந்த கடன் தொகையாலும் இவர் லண்டன் சென்றார். நூலகத்திலேயே அதிகம் படித்து எம்.எஸ்.ஸி. பட்டமும், பாரிஸ்டர் பட்டமும் பெற்று இந்தியா திரும்பினார்.

இந்தியாவில் வழக்கறிஞர் தொழிலை செய்தார். ஆனாலும் சமூகத் தொண்டையே முதன்மையானதாய் கருதினார். தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்கு பணம் பெறாமல் வாதாடி நீதி பெற்றுத் தந்தார். சுதந்திர போராட்ட வீரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தினார். தாழ்த்தப் பட்டவர் நலனுக்கு ஒரு கழகம் அமைத்தார். அவர்களுக்காக ஒரு மாணவர் விடுதி அமைத்தார். படிப்பகம், விளையாட்டுக் கழகம் என பல அமைத்தார்.

இந்நிலையில் மும்பை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டார். அதனை பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட நிதியைக்கூட தாழ்த்தப் பட்டோர் கழகத்திற்கே தந்து உதவினார்.

இவரது எதிர்ப்பாலும், முயற்சியாலும் 1923இல் பம்பாய் அரசு பள்ளியையும், மருத்துவமனைகள், அலுவலகங்கள், நீர்நிலைகள் முதலிய அனைத்திலும் தாழ்த்தப்பட்டவருக்கு சம உரிமை உண்டு. அதில் சாதி வேறுபாடுகள் காட்டக்கூடாது என்று ஆணைபிறப்பித்தது.
1947க்கு பின் இவரது பணி மிகவும் சிறப்பானது. இவர் நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பதவி ஏற்றார். இந்திய அரசியல் சட்டம் உருவாகிவிட ஒரு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக

இதன் உறுப்பினர்கள் பல காரணத்தால் இவருக்கு சரிவர உதவிடவில்லை. என்றாலும் உலக நாடுகளின் அனைத்து சட்டத் தொகுப்பையும் ஆய்வு செய்து மிகச்சிறந்த சிறப்பான எல்லோரும் ஏற்கத் தக்க ஓர் அரசியல் சட்டத்தை இவர் உருவாக்கித் தந்தார். அதன் சிறப்பை உலகில் பாராட்டாதவர்களே கிடையாது.

இவரின் கல்வியை பாராட்டாதவர் கள் குறைவு. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு சிறப்புப்பட்டம் தந்து கௌரவித்தது.

நமது நாட்டில் உள்ள உஸ்மானியாப் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியத்தில் டாக்டர் பட்டம் வழங்கியது. சாகும்வரை அயராது உழைத்த உத்தமர் இவர்.

இருப்பினும் இவருக்கு ஒரு மனக்குறை உண்டு. தாழ்த்தப் பட்ட சமூகத்தை உயர்த்திட இயலாத குறையே இது. 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6இல் காலமானார். இறந்தும் அழியாத பெருமையுடன் இவர் பெயர் நிலைத்திட இவரது திறமை நேர்மை உழைப்பு கல்வி சட்ட அறிவு ஆகியவையே காரணம் ஆகும்.