Kodi Katha Kumaran Biography Tamil..




ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வாழ்ந்து, பிழைக்க சரியான தொழில்கூட இல்லாது நலிவடைந்த நெசவுத்தொழில் செய்து, நாட்டு சுதந்திரத்தை நினைத்த ஒரு நல்லவர் குமரன், தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் சென்ற போது, வெள்ளைக்காரக் காவலர்கள் தாக்கி, மண்டை உடைந்து, இரத்தம் கொட்டி, மயங்கிய நிலையிலும், கையில் இருந்த தேசியக் கொடியை விடாது, நாட்டுப்பற்றில் உயிர் விட்டதால் 'கொடி காத்த குமரன்' என்று போற்றப்படும் வீரர் இவர். விடுதலைப் போரில் ஈடுபட்டோர் வரிசையில் மறக்கு முடியாத பெயராக. இவரின் தியாகம் இவரை நிலைக்க வைத்தது. காந்தியடிகள் மீதும் அவரது கொள்கையின் மீதும் அளவில்லாத பற்று கொண்டார். இவரைப்பற்றி அறிந்த மகாத்மாவும் இவர் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டார். இவர் இறந்த பின், அவர் வீடு வந்து நேரில் ஆறுதல் கூறினார் என்றால். குமரன் மீது காந்தியார் கொண்ட பற்று புரியும்.

சென்னிமலையில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் நாச்சிமுத்து தாயார் பெயர் கருப்பாயி அம்மையார். இவர்களுக்கு நான்காவது பிள்ளையாக 1904ஆம் ஆண்டு அக்டோபரில் பிறந்தவர் குமரன். பெற்றோர் இட்ட பெயர் குமாரசாமி. இவர்கள் குடும்பம் நெசவுத் தொழிலை மேற்கொண்ட வறிய வறுமைக்குடும்பம், போதிய வருவாய் சென்னிமலையில் கிடைக்கவில்லை. இதனால் பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் முடியாமல் குமரனின் பெற்றோர் கஷ்டப்பட்டனர். ஆனபோதும் குமரன் இளமையிலேயே கெட்டிக்காரர் எனத் தெரிந்ததால், அவர் அப்பா மிக்க கஷ்டத்திற்கு இடையே பள்ளிக்கு அனுப்பினார்.

குமரனும், கஷ்டம் உணர்ந்து, கோயில்சாதம் வாங்கி சாப்பிட்டு, தெருவிளக்கில் படித்தார். வறுமை துரத்தியது. மேல் படிப்பைத் தொடர போயிற்று படிப்பை நிறுத்தினார். பருத்தி நெசவில் வருவாய் சரியாக இல்லாததால், பள்ளிப் பாளையம் என்ற ஊரில், குமரனின் மாமா வீட்டுக்குச் சென்றார். அங்கே பட்டு நெசவில் பயிற்சி பெற்றார். நல்ல தேர்ச்சி பெற்று 19ஆம் வயதில் மறுபடியும் சென்னிமலை திரும்பினார் குமரன்.

பிறகு குமாரசாமியின் திருமணம் நடைபெற்றது. இவர் மனைவியின் பெயர் இராமாயி. குடும்பம் வந்ததும் கூடவே வறுமையும் வந்தது. எனவே பிழைப்பு தேடினார். அதிக நெசவுக்கு ஆதரவு அளிக்கும் திருப்பூர் செல்ல முடிவு செய்தார். இறுதிக் காலம் வரை இங்கேயே வாழ்ந்தார். இதனால்தான் இவர் 'திருப்பூர் குமரன்' என்று அழைக்கப்பட்டார்.

திருப்பூரில் பஞ்சு எடை போடும் விற்பனை நிறுவனம் ஒன்றில் குமரனுக்கு வேலை கிடைத்தது. மாத ஊதியம் முப்பதே ரூபாய். அதில் போதுமென்ற மனதுடன் வாழ்ந்தார் குமரன்.

சுதந்திரப் போர் தீவிரம் கொண்ட காலம் அது. காந்தியடிகள் பற்றியும், பிரபல தலைவர்கள், அவர்களது பேச்சு, ஆங்கிலேயர் கொடுமை பற்றி செய்தித்தாளில் வந்த செய்திகளை படித்த குமரன் மனதிலும் தேசப்பற்று வளர்ந்தது. விடுதலை உணர்வு நெஞ்சில் தோன்றியது,

மகாத்மாவின் கதர்க்கொள்கையில் ஏற்பட்ட பற்றால் குமாரசாமி கதராடை உடுத்த ஆரம்பித்தார். மனைவிக்கும் எடுத்துக்கூறி கதர் கட்டச் செய்தார் இராட்டை மூலம் வீட்டில் கதர் நூல் நூற்கவும் செய்தார். மகனின் விடுதலைப் போர் ஆர்வம் கண்டு அவர் தாயார் வருந்துவார். ஆனால் தாயைப் போல தாய் நாடும் முக்கியம் எனத் தெரிந்த குமரன், தொடர்ந்து நாட்டுப்பற்று மிக்கவராகவே விளங்கினார்.

கதருக்கு அடுத்தப்படியாக, மகாத்மா ஆர்வம் காட்டிய மது ஒழிப்பிலும் குமரன் பற்று கொண்டார். அப்போது கள்ளுக்கடை இருந்த காலம். 'தேச பற்று வாலிபர் சங்கம் என்ற ஓர் அமைப்பு திருப்பூரில் உண்டு. அதன் உறுப்பினர்களுடன் குமரனும் சென்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். அங்கே குடிவெறியர்களால் தாக்கப் பட்டார். இதற்காக இவர் கொள்கையில் இருந்து பின் வாங்கவில்லை.

காந்தி இர்வின் உறவு நல்லுறவாக இருந்தது. இர்வின் பிரபுக்குப் பிறகு வைஸ்ய்ராய் பதவிக்கு வந்த வெல்லிங்டன் காலத்தில் 1932ஆம் ஆண்டு ஜனவரி 4ல் காந்திஜி சிறை வைக்கப்பட்டார். இது நாட்டில் பெரிய போராட்டத்தை தூண்டியது. மறியல் போராட்டம் நடந்தது. திருப்பூரிலும் காந்தியார் கைதுக்கான கண்டனப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தாய் எதிர்த்தும் கேளாமல், தாய் நாட்டு விடுதலைக்காக, அதில் கலந்து கொள்ள குமரன் முடிவு செய்தார். ஒவ்வொரு நாளும் குழுவாக அனுப்பிட தேர்வு பெற்றனர். அதில் முதல் நாள் குமரனுக்கு கிடைத்தது.

தேசியக் கொடியுடன் வீரர் படையாக, ஊர்வலம் புறப்பட்டது. வந்தேமாதரம் கோஷத்துடன் ஊர்வலம் திருப்பூர் வீதியில் பவனி வந்தது. ஒரு காவல் நிலையத்தை ஊர்வலம் தாண்டிச்செல்லும் நேரம். அப்போது அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் முகமது என்பவர். அவரும் சில காவலர்களும் ஓடிவந்து, இதோடு கலைந்து செல்லுங்கள். ஊர்வலம் வேண்டாம் என எச்சரித்தனர். யாரும் அசையாது ஊர்வலம் தொடர்ந்து முன்னேறியது.

அது கண்டு கோபம் கொண்ட காவலர்கள் தடியால் வெறித்தனமாக கூட்டத்தை தாக்கினார். அதில் குமரன் பலமாக தாக்கப்பட்டார். மண்டை உடைந்து இரத்தம் சிந்தியது. அப்போது வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம் விடாது போட்டார் குமரன். தேசியக் கொடியை குமரன் கையில் இருந்து காவலர்கள் பிடுங்க முயன்றும் முடியாது தோற்றனர். தீவிரமாக காயம்பட்ட குமரன், அவரது தோழர்கள் சிலரால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறிதும் நினைவு திரும்பாமல், ஆஸ்பத்திரியில் குமரனின் ஆவி பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 28 தான்? குமரன் பிறந்த நாள் 4.10.1904. 1932ஆம் ஆண்டு ஜனவரி 10இல் இவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஜனவரி 11இல் காலமானார். அழியாத தியாகம் குமரனின் தியாகம்.