ஈ. வெ. ராமசாமி பெரியார் வாழ்க்கை வரலாறு Biography




'வைக்கம் வீரர்' என்று போற்றப்படும் தீரர். 'வெண்தாடி வேந்தர்' என அழைக்கப்படும் தலைவர். 'தந்தை பெரியார்' என ஏற்றப்படும் தியாகசீலர். 'ஈரோட்டு சிங்கம்' 'கறுஞ்சட்டை வீரர்' என்று பல்வேறு அடைமொழியால் அழைக்கப்படும் தமிழ்நாட்டு சாக்ரட்டீஸ். பகுத்தறிவு பகலவன் இவர். ஜஸ்டிஸ் பார்ட்டி பிறகு திராவிடர் கழகம் என்று இவர் அரசியல் வாழ்க்கை இருந்தாலும் ஆரம்பத்தில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். கதர் சட்டைவீரர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலயப் பிரவேசம் நடத்தியவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போராடியவர். மூட நம்பிக்கைகளைச் சாடியவர்.
1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாளில், கோவை மாவட்டம் ஈரோட்டில் பிறந்தவர் இவர். இவர் பெயர் ராமசாமி பள்ளியில் அதிகம் படிக்காது போயினும் இவர் மேதை. நிறைய அனுபவம் மிக்கவர்.

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்தவர். சுதந்திரம் பகுத்தறிவு - மனிதர்கள் சமம் - ஆண்டான் அடிமை இல்லை. சாதியில் தாழ்வு உயர்வு இல்லை என்பதில் மிக உறுதியாய் நின்றவர். மேல் சாதி ஆதிக்கத்தை இவர் மிகக் கடுமையாக சாடினார்.

1919இல் அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில், தந்தை பெரியார் காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு இவருக்கு காங்கிரஸ் மீது பற்றுக்கொள்ள காரணமானது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணி புரிந்தார். 1923இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவி பெற்றார்.

காந்திஜி 1927இல் பெங்களூரில் பெரியாரை விரும்பி அழைத்து நீண்ட நேரம் வரவேற்றுப் பேசினார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியாரும் பங்கு கொண்டார். தனது வீட்டில் இருந்த அந்நியத் துணிகளை தீக்கு இறையாக்கினார். கதர்த்துணி ஆதரவு பிரசாரம் செய்தார். கதர்த்துணியை மூட்டையாக கட்டி தெருத் தெருவாக விற்ற தீரர் இவர்.

காந்திஜியின் மது விலக்கு கொள்கையிலும் இவர் ஆர்வம் காட்டினார். கள்ளுக்கடைகளுக்கு முன்பு சென்று பல இடங்களில் மறியலில் ஈடுபட்டார். தனது தோட்டத்தில் கள் இறக்கிட கொடுத்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் என்றால் இவர் தீவிரத்தை நாம் அறியலாம்.

தீண்டாமை எனும் கொடுமைக்கு மிகவும் எதிராக போரிட்டார். சேரன்மாதேவியில் காங்கிரஸ் நிதி உதவியுடன் நடைபெற்ற குருகுலத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு தனியாக உணவு வழங்குவதை தடுத்தார். அது இயலாது போக. குருகுலமே மூடப்பட்டது.

கேரளத்தில் உள்ள 'வைக்கம்' என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்துப் போராடி வெற்றிக் கண்டார். இதனால் தான் இவர் 'வைக்கம் வீரர்' என்று போற்றப்பட்டார். 13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் தரப்பட்டது. பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும் பல நற்பணிகள் ஆற்றினார். காந்திஜி ஒத்துழையாமை திட்டம் அறிவித்த போது இப்பதவியை உதறி அதற்கு ஒத்துழைத்தார். ஏறத்தாழ தான் வகித்த 28 பதவிகளை பெரியார் துறந்தார்.

ரஷ்யா, ஜெர்மனி, எகிப்து, துருக்கி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், இலங்கை, மலேசியா போன்ற பல நாடுகளுக்கு சென்று வந்தவர் இவர்.

மனதில் பட்டதை துணிவோடு சொல்லும் ஆற்றல் மிக்கத் தீரர். கடவுள் உருவ வழிபாட்டையும், புராணம். இதிகாசம் அதில் வரும் நம்பமுடியாத கருத்துக்களைச் சாடினார். நீதிக்கட்சியில் இருந்தார். பிறகு இவரே 'திராவிடர் கழகம்' என்ற கட்சியை துவக்கி, தேர்தலில் நிற்காது. பதவியை நாடாது சமூக சீர்திருத்தம் ஒன்றிலேயே கவனம் செலுத்தினார். பல நூல்களை எழுதினார். 'விடுதலை' என்ற நாளேட்டைத் தொடர்ந்து நடத்தி வந்தார். தன்மான உணர்வு, பகுத்தறிவு என்றால் அது பெரியார் எனப் போற்றும் அளவிற்கு தனித்தன்மை பெற்றவர் இவர்.


இன்றைய திராவிட கட்சிகளுக்கெல்லாம் தாய் ஸ்தாபனம் தி.க.தான். இறுதிவரை வெண்தாடியையும் கருஞ்சட்டையும் அணிந்து வாழ்ந்தார். நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ்ந்து, தான் தேடிய செல்வத்தை பல கல்வி நிறுவனங்களுக்கு செலவிட்டார். பாலிடெக்னிக் - ஆசிரியர் பயிற்சி என பல்வேறு நிறுவனம் இவர் நிதியால் இன்றும் செயல்படுகிறது.