கடையேழு வள்ளல்கள் நள்ளி வாழ்கை




மதுரை மாநகருக்குத் தெற்கே தோட்டி என்ற பெயருடைய இயற்கை வளங்கள் பூத்துக் குலுங்கும் மலை ஒன்று உண்டு. அதனைச் சுற்றி முல்லை நிலமாகிய காடுகள் உண்டு. அக்காடுகளில் மாடுகள் வளர்த்துவரும் ஆயர்கள் வாழ்ந்து வந்தனர்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட தோட்டி மலையையும், அதனைச் சூழ்ந்திருந்த காடுகளையும் கொண்ட பகுதி கண்டீர நாடு என்று அழைக்கப்பட்டது. அந்நாட்டினை நள்ளி என்ற குறுநில மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். நள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன். செல்வ வளமும்,வீரமும், சிறந்த போர்ப் படையும் கொண்டவன்.

அருள் உள்ளம் கொண்டவன். யார் என்று கேட்காம லேயே தன்னை நாடி வந்தோருக்கு தேரும், யானையும், பெருஞ்செல்வத்தையும் மனமுவந்து வாரி வழங்குபவன். பகைவரை வெல்லும் பேராற்றல் கொண்டவன். இரவலரின் வறுமையைத் தீர்க்கும் கருணையாளன். இவனுக்கு கண்டீரக்கோ, கண்டீரக் கோப்பெரு நள்ளி என்ற பெயர்களும் உண்டு.

புகழ்பெற்ற புலவர்களும் சான்றோரும் நள்ளியிடம் பேரன்பு கொண்டிருந்தனர். அவர்களில் வன்பரணர் என்ற பெரும் புலவரும் உண்டு. வறுமையால் வாடிய அவர் தனது சுற்றம் சூழ தோட்டி மலை நோக்கி வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து நடக்க முடியாமல் அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது.

வழியிலிருந்த ஒரு பலா மரத்தடியில் அமர்ந்தார். அவரைப் பின்பற்றி சுற்றத்தினரும் அமர்ந்தனர். அச்சமயம் வேடன் ஒருவன் அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தான். வேடன் எனினும் செல்வச் செழிப்புடன் காட்சியளித்தான். வில்லும், அம்பும் வைத்திருந்தான். காலில் கழலும், கையில் கடகமும் அணிந்திருந்தான். மார்பில் தவழ்ந்தது. முத்துமாலை

அவன் வன்பரணரையும் அவருடைய சுற்றத்தாரையும் கண்டான். அவர்களின் வறிய தோற்றம் கண்டு மனமிரங்கி னான். செல்வனுக்குரிய தோற்றம் கொண்ட வேடனைக் கண்டதும் புலவர் வன்பரணர் எழுந்து வணக்கம் தெரிவித்தார். அப்படியே அமருங்கள் என்று கூறிவிட்டுத் தன்னோடு வந்த வீரர்கள் வரும்முன்பே அவர்களின் பசியைப் போக்க விரும்பினான். தான் வேட்டையாடிக் கொண்டு வந்திருந்த மானின் ஊனை நெருப்பில் சுட்டுப் பதம் செய்து, சுவையுடைய ஊன் உணவாக ஆக்கினான்.

"ஐயா, தாங்கள் யாவரும் பசியோடு இருக்கிறீர்கள். அதனால் இதனை உண்ணுங்கள்" என்று கூறி, வன்பரணரிடமும் அவருடன் வந்தவர்களிடமும் கொடுத் தான். அதனை மிகுந்த ஆவலுடன் உண்டு பசி நீங்கினர். நன்னீர் கொண்டு வந்து பருகத் தந்தான். தாகமும், சோர்வும் நீங்கப் பெற்றனர்.

புலவர், வேடனுக்கு நன்றி கூறி விட்டு விடைபெற்றார். அப்பொழுது வேடன் வன்பரணரைப் பார்த்து "ஐயா, தங்கள் தோற்றம் தாங்கள் ஒரு புலவர் என்பதை உணர்த்துகிறது. அரசர்கள் உங்களுக்குப் பரிசில்களை வாரி வழங்குவர். நானே இந்தக் கானகத்தில் வாழ்பவன். தங்களுக்கு நான் வழங்கத்தக்க பொருள் ஏதுமில்லையே? என் செய்வேன்?' என்று கூறி வருந்தியவன் தன் மார்பில் தவழும் முத்து மாலையையும், கையில் இருந்த கடகத்தை யும் கழற்றிப் புலவர் கையில் அளித்தான். "தாங்கள் எனது அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று வேண்டினான்.

அந்த வேளையில் வேடனுடைய துணைவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். வேடன் அளித்த பரிசினைக் கண்டு வியந்தார் வன்பரணர். வேடனிடம் "நான் கேட்காத பொழுதே எங்களுக்கு விருந்தும் பரிசில்களும் வழங்கும் ஈகை உள்ளம் கொண்டவனே! நீ யார்? உனது நாடு எது?" என்று கேட்டார். எந்தப் பதிலும் கூறாமல் அங்கிருந்து அவன் சென்று விட்டான்.

புலவர் அந்த வேடனின் உயர்ந்த பண்பை எண்ணி வியந்தார். தனது சுற்றமுடன் பயணத்தைத் தொடர்ந்தார். வழிப்போக்கர்களிடமெல்லாம் அந்த வேடனின் தோற்றம், அங்க அடையாளங்களை எடுத்துச் சொல்லி அவர்களிடம் அவனைப்பற்றி விசாரித்தார்.

அதற்கு அவர்கள், "ஐயா, அவர்தான் இந்தக் கண்டீர நாட்டு மன்னன். தோட்டி மலையின் தலைவன். அவன் பெயர் கண்டீரக் கோப்பெரு நள்ளி!" என்றனர். இதனைக் கேட்ட புலவர் மெய்சிலிர்த்து வியந்து பாராட்டினார். அவனது ஒப்பரிய சிறப்புகளைப் போற்றிப் பாடல்களைப் பாடினார். பல

பாடிப் பரிசில் பெற்றுப் பிழைக்கும் தொழிலைக் கொண்டவர்கள், அவர்களை ஆதரிக்கும் ஈகையுள்ள பெருமக்களைத் தேடிச் செல்வார்கள். அவர்களைப் பாடி மகிழ்வித்துப் பரிசில் பெற்றுச் சென்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் - மேலும் இசை மரபை நன்கறிந்தவர்கள்.

ஒரு நாள் பாணர்கள் புலவர் வன்பரணர் தலைமையில் விருந்துண்டு மகிழ்ந்து பண்ணிசைத்துக் கொண்டிருந்தனர். அப்போது மன்னன் நள்ளி அங்கு வந்தான். அவனும் இசை நுணுக்கம் மிகவும் தெரிந்தவன். மறைந்து நின்று இசை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். அப்போது பாணர்கள் காலை வேளைக்குரிய பண்ணை இசைக்காமல், முறை தவறிச் செவ்வழிப் பண்ணைப் பாடினர்.

நள்ளி வியப்படைந்தான். வன்பரணரிடம் சென்றான். "புலவரே! காலைக்குரியது மருதப் பண் அன்றோ?

என்று கேட்டான். ''ஆமாம் மன்னா. செவ்வழிப் பண் பாடக் காரணம் உண்டு. இப்பாணர்களின் வறிய நிலை தெரியாத படியும், பிறரிடம் சென்று இரவாதவாறு அவர்களுக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் நீ வாரி வழங்கி விட்டாய். உனது ஈகையால் பாணர்கள் பேருவகை அடைந்துள்ளனர். அதனால் பண் பற்றிய விதிமுறை களையும் அவர்கள் மறக்கும்படி செய்துவிட்டது. அதனால் அவர்கள் தங்களையும் மறந்து இசை மரபை மீறி இசைக்கின்றனர். உன் வள்ளல் தன்மையால் வந்தது' என்று நள்ளி மன்னனின் ஈகையை அரிய உவமையுடன் புகழ்ந்துரைத்தார்.

கண்டீரக் கோப்பெரு நள்ளிக்குத் தம்பி ஒருவன் உண்டு. அவன் பெயர் இளங்கண்டீரக்கோ. அவனும் ஈகையில் சிறந்தவன். இளங்கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ என்பவனுடன் நட்பு பாராட்டி வந்தான். கள்ளம், கபடு அறியாதவன். அவன் விச்சி என்னும் மலைநாட்டை ஆண்டு வந்த விச்சிக்கோ என்ற மன்னனின் தம்பியாவான்.

ஒரு நாள் இளங்கண்டீரக்கோவும் இளவிச்சிக்கோவும் அரண்மனையில் ஓரிடத்தில் உரையாடி மகிழ்ந்தனர். அப்போது பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் பெருந்தகை அங்கு வந்தார். புலவரைக் கண்ட இளவரசர்கள் இருவரும் எழுந்து வணங்கி, வரவேற்று உபசரித்தனர்.

அப்போது புலவர், இளங்கண்டீரக்கோவை மட்டும் தழுவி வாழ்த்தினார். இளவிச்சிக்கோவைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் மனம் வருந்தி, 'புலவர் பெருமானே! என்னை வாழ்த்தாத காரணம் யாது?" என்று கேட்டான். அதற்குச் சாத்தனார், ''இளவிச்சிக்கோவே! இந்த இளங்கண்டீரக்கோவும் இவனது அண்ணன் நள்ளியும் இவன் குலத்து முன்னோர்களும் ஈகையால் புகழ் பெற்றவர்கள். இவர்களிடம் வந்து பரிசில் பெறாமல் திரும்பியவர் எவருமில்லை.

குடிமக்களும் வள்ளல்தன்மையுடன் விளங்கி வரு கின்றனர். அவ்வாறிருக்க நள்ளியின் கொடை வளத்தினை அளவிட்டுக் கூறல் இயலுமோ? அத்தகைய சான்றோனின் தம்பி இவன். அதனால்தான் அவனை வாழ்த்தினேன்" என்று கூறினார்.

உடனே இளவிச்சிக்கோ, "இவரைத் தழுவியதற்கான காரணம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. ஆனால் என்னை நீங்கள் தழுவாமைக்கு என்ன காரணம்? அதனை அறிய விரும்புகிறேன்'' என்றான்.

அதற்குப் புலவர் சாத்தனார், 'புலவர்தம் வேண்டு கோளையும் புறக்கணித்து, முறையில்லாமல் பெண் கொலை புரிந்து, பெரும் நீங்காப் பழிக்கு உள்ளாகிவிட்ட நன்னன் என்ற சிற்றரசனின் மரபில் வந்தவன் நீ! பாடிப் பரிசில் பெற வருவோருக்கு வழி திறவாது அடைபட்டுக் கிடப்பது உனது நாடு. அதனால்தான் என் போன்ற புலவர்கள் உன்னை, உன் குலத்தவரை, உனது நாட்டைப் பாடுவதையே நிறுத்திவிட்டோம். அதனால்தான் உன்னை நான் தழுவிக் கொள்ளவில்லை" என்று பதில் அளித்தார்.

இதனைக் கேட்ட இளவிச்சிக்கோ மனம் சோர்ந்து. தலை கவிழ்ந்தான்.

இவ்வாறு சாத்தனார், வன்பரணர், பிற புலவர் பெருமக்களாலும் பாராட்டப் பெற்ற கண்டீரக் கோப்பெரு நள்ளியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.