அரச சபை கூடி நீண்ட நேரமாகியும் பீர்பால் வராததைக் கண்டு கோபமுற்ற அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பாலின் வீட்டுக்குச் சென்று அழைத்து வரச் சொன்னார். வீட்டில் இருந்து புறப்படுவதற்கு தயாராக இருந்த பீர்பாலிடம் அரசர் அழைத்து வரச்சொன்னதாக காவலாளி கூறியதும் வேக வேகமாக புறப்பட்டார் பீர்பால். சபைக்கு வந்த பீர்பாலிடம், என்ன பீர்பால். ஏன்? இன்று தாமதமாக வந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டார். 'அரசே மன்னிக்க வேண்டும்... அழுது கொண்டிருந்த என் மகனை சமாதானப்படுத்தி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. நான் சபைக்கு தாமதமாக வந்ததற்கு இதுவே காரணம் அரசே' என்றார் பீர்பால். அக்பருக்கு பீர்பால் கூறியதை கேட்டதும் சிரிப்பு வந்தது. 'குழந்தையின் அழுகையை அடக்க உங்களால் முடியவில்லை என்பதை கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது. புத்திசாலியான நீங்கள் இப்படிக் கூறலாமா? என்று கேட்டார் அக்பர். 'அரசே குழந்தைகளின் அழுகையை நிறுத்துவதற்கு அதனை எப்படியெல்லாம் சமாதானப் படுத்த வேண்டும். என்று உங்களுக்கு தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.' பீர்பால்.. நீங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! நானாக இருந்தால் கணப் பொழுதில் குழந்தையின் அழுகையை நிறுத்தியிருப்பேன்! என்றார் அக்பர். 'அரசே... நான் சிறு குழந்தையாக நினைத்து கொண்டு நடிக்கிறேன். நான் இப்போது அழப் போகிறேன்! என்னை எப்படி சமாதானப்படுத்துவீர்கள் என்பதை பார்ப்போம்! குழந்தை போல அடம் பிடித்து அழப்போகும் உம்மை சமாதானப்படுத்த வேண்டும்! உமது அழுகையை நிறுத்த வேண்டும்! அவ்வளவு தானே எங்கே ஆரம்பியுங்கள் உமது நாடகத்தை! என்றார் அக்பர் குழந்தையை போல கண்களை கசக்கிக் கொண்டு தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்து விட்டார் பீர்பால். சபையில் இருந்தவர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பீர்பாலின் அழுகையை கண்ட அக்பர் தந்தையாக மாறி ‘கண்ணா அழாதேடா லட்டு தரட்டுமா? மிட்டாய் தரட்டுமா' என்றார் கனிவோடு. பீர்பாலோ எதுவும் சொல்லாமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். என்னடா கண்ணா... விளையாடறதுக்கு பொம்மை வேணுமா?' என்று பரிதாபத்தோடு கேட்டார் அக்பர். 'எனக்கு கடிச்சு தின்ன கரும்பு வேணும்' என்று அழுது கொண்டே கூறினார் பீர்பால். சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையோடு மகிழ்ந்த அக்பர் காவலாளியை அனுப்பி கரும்பு வாங்கி வரச் சொன்னார். காலாளி முழுக் கரும்பு ஒன்றை வாங்கிக் கொண்டு ஓடி வந்தான். அக்பர் முழுக் கரும்பை கையில் கொடுத்ததும் அதை வாங்கிய பீர்பால் தரையில் தூக்கி எறிந்து விட்டு, 'இதை அப்படியே தின்ன முடியுமா?'சின்ன சின்ன துண்டாக வெட்டிக் கொடுக்கச் சொன்னார். காவலாளி முழுக் கரும்பை துண்டு துண்டாக வெட்டி பீர்பாலின் கையில் கொடுத்தார். 'நல்ல பிள்ளையா இந்தக் கரும்பை தின்னுட்டு தூங்கனும்! இன்னும் அழுதுகிட்டே இருக்க கூடாது! என்ன சரியா? என்று சமாதானப்படுத்தினார். பீர்பாலோ துண்டுக் கரும்புகளை வைத்துக் கொண்டு தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். 'என்ன பீர்பால் கரும்பு தான் வந்துட்டதே அப்புறம் எதுக்கு அழுதிட்டிருக்கே?! என்றார் அக்பர். கையில் வைத்திருந்த துண்டுக் கரும்புகளை தூக்கி எறிந்து விட்டு, இந்த கரும்புத் துண்டு வேண்டாம். இதையெல்லாம். ஒட்டவெச்சு, முழுக் கரும்பா கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்'என்றார் வெட்டிய கரும்பை எப்படி ஒட்ட வைப்பது என்று திகைத்தார் அக்பர் குழந்தைகளின் அழுகையை நிறுத்தி சமாதானப்படுத்த வைப்பது சிரமமான காரியம் என்பதை ஒத்துக்கொண்டார்