ஏழை தொழிலாளி ஒருவர் காசியாத்திரை போக விரும்பினார். தாம் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருளை சேர்த்து வைத்து இருந்ததில் செலவுக்கு சிறிது பணத்தை எடுத்துக் கொண்டார். மீதி பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஒருவரிடம் கொடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த ஊரில் அமைதியாக வாழ்ந்து வந்த சாமியார் ஒருவரை தேடிச் சென்றார் ஏழை தொழிலாளி. 'ஐயா... பல வருடமாய் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் ஆயிரம் பொற்காசுகளை சேர்த்து வைத்திருக்கிறேன். நான் காசியாத்திரை சென்று வரும் வரையில் இந்தப் பொற்காசுகளை தாங்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திரும்பி வந்த பின்பு தங்களிடம் இருந்து வாங்கிக் கொள்கிறேன். என்றார் ஏழை தொழிலாளி. இதைக் கேட்டதும் சாமியார் பதறிப் போனார். 'பொற்காசுகளை என்னிடம் கொடுத்து விட்டுச் செல்வதாக கூறுகிறாயே, இவ்வுலகில் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எதுவும் இல்லாமல் அணுதினமும் ஆண்டவனை நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு இப்படி ஒரு பொறுப்பினை கொடுக்க நினைக்கிறாயே, என்றார் சாமியார். ஐயா உங்களுக்கு இதில் ஏதும் சிரமம் இருப்பின் தயவு செய்து எனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்! என்றார் அந்த ஏழை தொழிலாளி. உன் பொருள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமும் என்றால் பொற்காசுகளை பெட்டியில் வைத்து பூட்டி இந்த மரத்தடியில் புதைத்து விட்டு செல். காசி யாத்திரை சென்று திரும்பி வந்த பின்பு உன் பொற்காசுகளை எடுத்துக் கொள் என்றார் சாமியார். சாமியாரின் பேச்சைக் கேட்ட ஏழைத் தொழிலாளிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சாமியார் கூறியபடியே பொற்காசுகளை மரத்தடியில் புதைத்து விட்டு காசியாத்திரைக்கு சென்று விட்டார் ஏழைத் தொழிலாளி. ஒரு மாதம் சென்றது. காசியாத்திரையை முடித்து விட்டு திரும்பியவர் சாமியாரை பார்க்கச் சென்றார். 'நீ வைத்த இடத்தில் தோண்டி எடுத்து பொற்காசுகளை எடுத்துக் கொள்' என்றார் சாமியார். மரத்தடியில் புதைக்கப்பட்டிருந்த இடத்தை தோண்டிய அந்த ஏழை, தான் வைத்திருந்த பெட்டியை காணாமல் பதறிப் போனார். சாமியாரிடம் சென்று அழாத குறையாக சுவாமி! நான் வைத்துவிட்டுப் போன பெட்டியைக் காணவில்லை என்றார். 'அப்பனே நான் தான் முன்பே கூறினேனே. இங்கே வைத்து விட்டு போக வேண்டாம் என்று நான் கூறியதைக் கேட்காமல் வைத்து விட்டு சென்றாய்! நான் தியானத்தில் இருந்த போது பொற்காசுகளை யாரோ திருடிச் சென்றிருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார் சாமியார். பலமுறை கெஞ்சி கேட்டும் திரும்ப திரும்ப தாம் கூறியதையே கூறினார் சாமியார். அடுத்த நாள் பீர்பாலிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறினார். அனைத்து விபரங்களையும் கேட்டுக் கொண்ட பீர்பால் ஒரு முடிவுக்கு வந்தார். பொற் காசுகளை சாமியார் தான் எடுத்திருக்க வேண்டும் என்று யூகித்தார். 'நான் எனது நண்பர் ஒருவரை அந்த சாமியாரிடம் சென்று பத்தாயிரம் பொற்காசுகளை கொடுத்து வருமாறு கூறுகிறேன்! அப்போது அந்த இடத்திற்கு நீங்கள் செல்லுங்கள் என்றார் பீர்பால். அடுத்தநாள் பீர்பாலின் நண்பர் சாமியாரைப் பார்க்கச் சென்றார். 'சுவாமிகளே நான் வெளியூர் செல்ல இருக்கிறேன் இந்த பையில் பத்தாயிரம் பொற்காசுகள் உள்ளன. நான் வெளியூர் வந்த பின்பு தங்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறேன்! என்றார். பத்தாயிரம் பொற்காசுகளை தரப்போவதாக கூறியதும் சாமியாருக்கு ஆசை வந்துவிட்டது. எப்படியும் அதையும் அபகரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் வேண்டா வெறுப்பாக பேசினார். அப்போது ஏற்கனவே ஆயிரம் பொற்காசுகளை பறிகொடுத்தவன் சாமியாரை பார்க்க வந்தார். நீ ஏன் இங்கு வந்தாய் என்றார் சாமியார் கோபத்துடன். உங்களிடம் கொடுத்த ஆயிரம் பொற் காசுகளை வாங்கி கொண்டு போகலாம் என்று வந்தேன்' என்றார். இந்த ஏழையிடம் ஆயிரம் பொற் காசுகளுக்காக சண்டைபோட்டால் பத்தாயிரம் பொற் காசுகளை இழக்க நேரிடுமே'என்று எண்ணிய சாமியார் தான் மறைத்து வைத்திருந்த ஆயிரம் பொற்காசுகளை கொண்டு வந்து கொடுத்தார் சாமியார். அப்போது மரத்துக்குப் பின்னால் மறைந்திருந்த காவலாளிகள் சாமியாரை கையும் களவுமாய் பிடித்தார்கள். பதறிப்போன சாமியார் ஓட முயன்றார். அவரை கட்டிப்போட்டு உண்மையை ஒத்துக் கொள்ள வைத்தார்கள். மண்ணுக்குள் புதைந்து வைத்த ஆயிரம் பொற்காசுகளை தாம் எடுத்துக் கொண்டதை ஒத்துக் கொண்டார். சாமியார் வேடத்தில் இத்தனை நாட்களும் உலாவிக் கொண்டிருந்தவன் பெரிய கொள்ளைக்காரன் என்பது தெரிந்ததும் சிறையில் அடைத்தார்கள்.