maruthu pandiyar history in tamil ..





மருது பாண்டியர். மருது சகோதரர்கள், மருதிருவர் என்று அழைக்கப்படுவர் இருவர். இருவரும் சகோதரர்கள். அண்ணன் பெரியமருது என்றும், தம்பி சின்னமருது என்றும் அன்புடன் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த தியாக சீலர்கள் வரிசையில் மறக்கமுடியாத வரலாற்று நாயகர்களில் இவர்கள் பெயரும் அழியாத இடம் பெறுகிறது. இவர்கள் பிறந்தது சிவகங்கை மாவட்டம். முக்குளம் என்ற ஊர். இவர்களது காலம் 1748-1801. இவரது தந்தை மொக்கப்பழனியப்பன் சேர்வை. தாயார் பெயர் ஆனந்தாயி அம்மையார் என்பதாகும். 1772இல் இராமநாதபுரம் சிவகங்கைச்சீமை போன்ற சிற்றரசுகள் மீது ஆங்கிலேயப் படையெடுப்பு நடைபெற்றது. அப்போது சிவகங்கை மன்னராக இருந்தவர் முத்துவடுகர் என்பவர். இவரது மனைவியார் வேலு நாச்சியார். இருவருமே வீரமிக்கவர். இவர்களிடம் படைத் தலைவர்களாக மருது சகோதரர்கள் இருந்தனர். முத்துவடுகர் வீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டாலும், போரில் உயிர் துறந்தார். வேலு நாச்சியாரும், மருது சகோதரர்களும் தப்பி திண்டுக்கல் மலையில் தஞ்சம் புகுந்து, ஹைதர் அலியின் துணையை நாடினர். சிவகங்கை அரசு மருதுபாண்டியர் கைக்கு மாறியது. பெரிய மருது ஒரு வேட்டைப்பிரியர். அவர் காட்டில் வேட்டையாடுவதிலேயே விருப்பம் கொள்ள, சின்னமருது சிவகங்கை ஆட்சியினை சிறப்பாகச் செய்தனர்.
1783இல் ஆங்கிலப் படைகள் சிவகங்கை மீது படையெடுத்தது. இதனை மருது சகோதரர்கள் முறியடித்து வென்றனர். இதேபோல் மறுமுறை 1789இல் கர்னல் ஸ்டூவர்ட் படையெடுத்த போதும், தீரமுடன் எதிர்த்து வெற்றியே கண்டனர்.

இதன்பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின், அவன் தம்பி ஊமைத்துரைக்கு இவர்கள் அடைக்கலம் தந்தனர். இதனைக் கண்டு கோபம் கொண்டு, மருது சகோதரர்களைத் தண்டிக்க நடத்தப்பட்ட 1801ஆம் ஆண்டு போர் மிகக்கடுமையாக இருந்தது. இது ஏறத்தாழ 150 நாட்கள் இடைவிடாது நடைபெற்றது ஆங்கிலேயர்களே இறுதியில் வெற்றி பெற்றனர். கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக் கொடுத்தது போல, நயவஞ்சர்களால் இவர்களும் காட்டிக் கொடுக்கப்பட்டனர். 1801 - அக்டோபர் 27இல் மருதுபாண்டியர் தூக்கில் போடப்பட்டு இறந்தனர். வீரத்தால் போரால் அழிக்க முடியாத இவர்கள் உயிர், மருது பாண்டியர் காவலர்களில் ஒருவரான கறுத்தான் என்பவனின் கயமையில் பண ஆசையால் இவர்கள் வீழ்ந்தனர். இவனால் சின்ன மருது ஆங்கிலேயர் வசமானார். ஆனபோதும் பெரியமருதுவை அவர்களால் சிறை செய்ய முடியவில்லை.

தெய்வபக்தி, நிறைந்த இவர்கள் கட்டியது காளையார் கோயில். பத்து நாளில் பெரியமருது சரண் அடையாவிட்டால் காளையார் கோயில் இடிக்கப்படும் என்று ஆங்கிலேயர் அறிவித்தனர். கடவுள் பக்தியின் காரணமாக, கோயிலைக் காக்க பெரியமருது தானாகவே வந்து சரண் அடைந்தார். அந்த பக்தி மரணத்திலும் தெரிந்தது.

இறந்த பின்பு இருவரது உடலையும் திருப்பத்தூரிலும், தலைகளை காளையார் கோயில் முன்பும் புதைக்க வேண்டும் என இவர் தந்த வேண்டுகோளே.
இதற்கு சாட்சி. அவ்வாறு செய்யப்பட்டது. இவர்கள் காளையார் கோயிலைக் கட்டியது மட்டுமில்லாது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், குன்றக்குடி முருகன் கோயில் போன்றவற்றிற்கு திருப்பணிக்கு உதவினர். பல இடங்களில் அன்னசத்திரம் அமைத்து தரும காரியங்களில் ஆர்வம் காட்டினர். நீர்ப்பாசனக்குளம் - கிணறு என மக்கள் நலம் காத்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக இவரது சுதந்திரத்தாகம், ஆங்கிலேயர் எதிர்ப்பு, வீர உணர்வால் இவர்கள் பெயர் வரலாற்றில் அழியாது பதிக்கப்படுகிறது எனலாம். அஞ்சா நெஞ்சம் என்பதற்கு இந்த அன்பான இரு சகோதரர்களே சான்றாவார்.